கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் உள்ளாட்சித்துறை, தூய்மை பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

Breaking News

header ads

கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் உள்ளாட்சித்துறை, தூய்மை பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களது சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்படுமானால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை, 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் தன்னலமற்ற முறையில் பணிபுரிந்து வருவோர் இறப்பை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்துவது அரசின் கடமை என்பதை கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பிற துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கும், இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களுக்கும் அவர்களது பணியை பாராட்டி உரிய விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
சென்னை மாநகரத்தில் நோய் தடுப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சோதனைக்கு உள்ளாக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம், சென்னை மாநகரில் தற்போது செய்யப்பட்டு வரும் பரிசோதனைகளை கணிசமாக உயர்த்தவும், அதன் முடிவுகளை உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், அதற்காக இரண்டு ஐஏஸ் அதிகாரிகளையும் சென்னை மாநகரத்திற்கு கூடுதலாக மண்டல அலுவலர்களாக நியமித்துள்ளார்.

Post a Comment

0 Comments