கொரோனா எனக்கூறி மாயமான மாயாண்டி ! மடக்கி பிடித்த போலீசார்..!

Breaking News

header ads

கொரோனா எனக்கூறி மாயமான மாயாண்டி ! மடக்கி பிடித்த போலீசார்..!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி சித்திரை தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் நாகராஜன் (45). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், நாகராஜன் பணிக்கு செல்லாமல் வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணத்தை திருட முயன்றதாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (29) என்பரை ஆழ்வார்திருநகரி போலீஸார் கைது செய்தனர்.

இவர் மீது மேலும் சில திருட்டு வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் ஸ்ரீவைகுண்டம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து மாயாண்டியை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மாயாண்டியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். இதையொட்டி அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரவில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் மாயாண்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு மாயாண்டியை டாக்டர் பரிசோதித்தார். அப்போது மாயாண்டி இருமியவாறு தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் மற்றும் போலீசார், மாயாண்டியை கரோனா வார்டில் அனுமதித்து, அவரது ரத்தம், சளி ஆகியவற்றை பரிசோதிக்க ஏற்பாடு செய்தனர். அந்த வார்டின் வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணி அளவில் மாயாண்டி கழிப்பறைக்கு சென்று வருவதாக டாக்டரிடம் கூறிச் சென்றார்.

ஆனால், கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகளை மெதுவாக கழட்டி, அந்த இடைவெளி வழியாக வெளியே வாறுகால் சகதியில் குதித்து தப்பி சென்றார். நீண்ட நேரமாகியும் கழிப்பறையில் இருந்து மாயாண்டி வெளியே வராததால், மருத்துவ பணியாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது, கழிப்பறை ஜன்னலின் வழியாக மாயாண்டி தப்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாயாண்டியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்கிடையே மாயாண்டி, பாளையங்கோட்டையில் உள்ள மாமானாரின் வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளம் வழியாக தப்பி சென்றார். இதனை அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விடிய விடிய வேய்ந்தான்குளம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும், மாயாண்டி போலீசாரிடம் சிக்காமல் நழுவினார்.

இந்நிலையில் மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் பதுங்கி இருந்த மாயாண்டியை போலீசார் நேற்று மதியம் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், கரோனா வார்டில் இருந்து தப்பி சென்றதாக மாயாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு மருத்துவமனை கரோனா வார்டில் இருந்து தப்பிய கைதியை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments