தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகள் கைகழுவுவதற்காக 2 இடங்களில் வாஷ்பேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது போல், ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 பேர் தொடர்ந்து வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்படுகிறது. அவர்களை டாக்டர்கள் தினசரி பரிசோதனை செய்து வருகிறார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருமல், சளி காய்ச்சலுடன் 2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அதன் முடிவுகள் தெரியவரும். அவர்களுக்கு கரோனா பாதிப்பு இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கரோனா வைரஸ் 24x7 கட்டுபாட்டு அறை எண் 0461-2340101 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்வதற்காக பொது இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முகமூடி, கையுறை போன்றவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளை மூட உத்தரவிடவில்லை. இருந்தாலும் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வணிக நிறுவங்கள், கிளப்கள் போன்ற பொது இடங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எனினும், 10, 11, 12 ஆகிய வகுப்புகள் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாநகர நல அலுவலர் டாக்டர் அருண்குமார், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


0 Comments