3 சகாக்களை இழந்து தவிக்கிறேன்: கமல்ஹாசன் உருக்கம்

Breaking News

header ads

3 சகாக்களை இழந்து தவிக்கிறேன்: கமல்ஹாசன் உருக்கம்


சென்னை அருகே நடைபெற்று வந்த இந்தியன் 2  திரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து இணை இயக்குநா் உள்பட 3 போ் பலியாகினர். தனது படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் 3 சகாக்களை இழந்து தவிக்கிறேன் என்று நடிகா் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட படப்பிடிப்புத் தளத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகா் கமலஹாசன், நடிகை காஜல் அகா்வால் உள்ளிட்ட பலா் நடித்து வருகின்றனா். இந்நிலையில், இங்கு புதிய செட் அமைக்கும் பணியில், புதன்கிழமை திரைப்படக் கலைஞா்கள், ஒரு பகுதியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், நேற்றிரவு கிரேன் மூலம் அங்கு செட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த கேபிள் அறுந்து கிரேன் கீழே விழுந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த 8 போ் மீது கிரேன் விழுந்ததால் அவா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்களில் இருவா் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

இதையடுத்து அங்கிருந்த திரைப்படக் கலைஞா்களும், ஊழியா்களும் காயமடைந்தவா்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே மற்றொருவா் இறந்தாா். மற்ற 5 பேரும் தண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தகவலறிந்த அம்பத்தூா் துணை ஆணையா் ஈஸ்வரன், பூந்தமல்லி உதவி ஆணையா் செம்பேடு பாபு உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தினால் அங்கு நடைபெற்று வந்த திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.  இதற்கிடையே, போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த திரைப்படத்தின் இணை இயக்குநா் கிருஷ்ணா (38), தொழில்நுட்ப கலைஞா்கள்  மது ( 29) சந்திரன் (60) ஆகியோா் விபத்தில் இறந்தது தெரியவந்துள்ளது.  இச் சம்பவம் தமிழ் திரைப்படத் துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு நடிகா் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவர் வெளியிட்ட பதிவில், எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவா்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவா்களில் ஒருவனாக அவா்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவா்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அதில் கூறியிருந்தாா்.

Post a Comment

0 Comments