தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவு !

Breaking News

header ads

தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவு !


அதிமுக மூத்த தலைவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன்(வயது 75) உடல்நலக் குறைவால் காலமானார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற ஊரை சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன்(வயது 75). எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிகுந்த தலைவர்களில் ஒருவர்.

சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1980ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.

1989ஆம் ஆண்டில், அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் பி.எச்.பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி எஸ் அணிக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும், சசிகலா தரப்புக்கு கடுமையான எதிர்ப்பாகவும் இருந்து வந்தார். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, சிகிச்சை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என முதன் முதலில் வலியுறுத்தியதும் பி.எச்.பாண்டியன்தான்.

அதிமுகவின் மூத்த முன்னோடியான அவர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணிக்கு உயிர் பிரிந்தது. பி.எச்.பாண்டியன் உடலுக்கு இறுதி சடங்கு சென்னையில் நாளை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments