போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைச்சர் தொடக்கி வைத்தார் !

Breaking News

header ads

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைச்சர் தொடக்கி வைத்தார் !


தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 1,222 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (19.01.2020) நடைபெற்றது. இம்முகாமில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்தியா முழுவதும் இளம்பிள்ளைவாதத்தை ஒழிக்கும் வகையில் அரசின் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அனைத்துப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டு 0 முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (19.01.2020) 0 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 1,35,629 (ஒரு இலட்சத்து முப்பந்தைந்து ஆயிரத்து ஆறுநூற்று இருபத்தொன்பது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட உள்ளது. மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்க தூத்துக்குடி மாவட்டத்தில் 1,222 (ஆயிரத்தி இருநூற்று இருபத்திரண்டு) மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதிற்;குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொதுசுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,238 (ஐந்தாயிரத்து இருநூற்று முப்பத்தெட்டு) நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்கு 134 (நூற்று மூப்பத்தி நான்கு) வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.பொது மக்கள் எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கி இளம்பிள்ளைவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்திட ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என தெரிவித்தார்.

இம்முகாமில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கிருஷ்ணலிலா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மரு.ஜெசிமேரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் சுதர்சன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர் வடிவேல், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன், புதுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமிராஜ், வட்டார மருத்துவ அலுவலர் மரு.நிமோநிஷ், முக்கிய பிரமுகர்கள் சண்முகவேல், பால்ராஜ், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments