பாஜக செயல் தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஜே.பி நட்டா இன்று முறைப்படி அக்கட்சியின் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டர்
பாஜக தலைவராக செயல்பட்டு வந்த அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றதையடுத்து அக்கட்சியின் தேசியத் தலைவராக வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்பட்டது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது . இதில் 21 மாநிலங்களில் பாஜக தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராதாமோகன் சிங் கூறியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை 10 மணியிலிருந்து 12.30 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜே.பி நட்டா மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார் . இதையடுத்து ஜே.பி.நட்டா பாஜகவின் தேசியத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன
59 வயதான ஜே.பி.நட்டா இமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். பாஜக வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்ட அவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஜே.பி.நட்டா கட்சியின் செயல் தலைவராக இருந்து பாஜகவின் தேசியத் தலைவராக இன்று பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .



0 Comments