சீனாவின் ஊகான் நகரில் காய்ச்சலால் பரவிய கொரோனா வைரசுக்கு நேற்று காலை வரை 17 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மாலையில் முதியவர் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் நாளை சீனாவில் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு வருவது வழக்கம். இதனால் கெரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே 11 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஊகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டது.
அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து ஊகானுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊகானைத் தொடர்ந்து 7 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹூவாங்காங் நகரமும் முடக்கப்படுகிறது. அங்கும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார வரலாற்றில் 11 மில்லியன் மக்களை வைத்து பூட்டுவது என்றுது சரித்திரத்தில் முன்னெப்போதும் நடந்திராத ஒன்று என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக சீனாவில் பொது சுகாதார அவசர நிலை இருப்பதாகவும், அது உலகளாவிய நிலையில் இல்லை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சீனர்களின் உணவுப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள பாம்புகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. தைவானை பூர்வீகமாகக் கொண்ட பட்டை கட்டுவிரியன் பாம்புகளும், சீன நாகங்களும் அவர்களுக்கு பிடித்த மெனுவில் முக்கிய இடத்தில் உள்ளன.
தெற்கு மற்றும் மேற்கு சீனாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் இந்த வகை பாம்புகளிடம் குளிர்காலத்தில் கொரானா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பட்டை கட்டு விரியன் பாம்புகளை வேகவைக்காமல் சாப்பிட்டிருந்தால் அதன் உடலிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ஊகான் நகர மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு குவிந்து வருகின்றனர்.
இதேபோல் ஊகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக இதுநாள்வரை உயிரினங்களை ரசித்து ருசித்த சீனர்களின் பார்வை தற்போது காய்கறிகளுக்கு மாறியுள்ளது. இதனால் காய்கறி விற்பனை நிலையங்களில் குடுமிப்பிடி சண்டை போட்டு அதனை வாங்கிச் செல்கின்றனர்.



0 Comments