ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிக்கு இந்திய அணியின் திட்டம் தெளிவாக இருந்ததே காரணம் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் 5-வது இடத்தில் களமிறங்கிய ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், முதலில் இந்திய அணி பேட் செய்ய தயாரான போதே எங்கள் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது. கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதே அணியின் திட்டம்.
அதன்படி 50 ஓவர்கள் முடிவில் எப்படியாவது 320 முதல் 330 ரன்கள் சேர்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தோம். இந்த இலக்கை அடைய கோலி மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டுகளை முன்கூட்டியே இழக்க கூடாது என தீர்மானித்தோம். எதிர்பார்த்ததில் கோலி வழக்கம் போல சிறப்பாக ஆடினார்.
ரவீந்திர ஜடேஜாவும் தன பங்கிற்கு பவுண்டரிகள் அடித்து ரன்கள் சேர்த்தார். துவக்க வீரர் தவான் வலுவான ரன்கள் அடித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்ததால், எங்கள் திட்டம் சிறப்பாக வேலை செய்தது. இதனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே ரன்களை சேர்த்தோம் என்றார் ராகுல்.
மேலும் பேசிய கே.எல்.ராகுல், ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவதொரு புதிய பங்களிப்பை தருவது ஆசிர்வாத்திற்குரியது என குறிப்பிட்டார். வெவ்வேறு நிலைகளில் அணிக்காக களமிறங்கும் போதும் பேட்டிங் என்பதை நான் ஒரு கலையாக தான் பார்க்கிறேன். பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள புதிய வழிமுறைகள், மற்றும் கடின சூழலை எதிர்கொள்ள தேவையான புதிய வழிகள் என பலவற்றை கற்று கொள்கிறேன். அந்த நிலையை நான் அழுத்தமாக நினைக்காமல் நன்றாக அனுபவித்து ஆடுகிறேன்.
பிற அணிகளில் உள்ள நடுத்தர வரிசை வீரர்களான ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்து எனது பேட்டிங்கை சரி செய்தேன். இப்போது எனது விளையாட்டு மேலும் சிறப்பாக மாறியுள்ளது என கூறினார் கே.எல்.ராகுல்



0 Comments