சென்னை பல்லாவரம் அருகே பம்மல் நகராட்சியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பிரதான சாலையில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதாகவும், அதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதை தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையிலான தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய அமர்வு விசாரித்தது. விசாரணையில் ஆஜரான பம்மல் நகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞரும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்களும், செய்திகள் வெளியானதும் எம்ஜிஆர் பிரதான சாலையில் கொட்டப்பட்ட இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் தீங்கை விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
பம்மல் நகராட்சி ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து, அக்குழு பம்மல் சுற்று வட்டாரத்தில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் கொட்டப்படுகிறதா ? எனவும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.



0 Comments