பழனி அருகே தமிழக அரசின் கலைச்சுடர்மணி விருதை பெற்ற தவில் இசைக்கலைஞர் மாரிமுத்து ஓய்வூதியம் கிடைக்காத விரக்தியில் விருதை திருப்பி கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 65).இவர் பொய்க்கால் கட்டை மீது நின்று பலமணிநேரம் தவில் வாசிப்பதில் வல்லவர். தவில் இசைக் கலைஞரான மாரிமுத்து பொய்க்காலில் நடந்தபடி 61 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தபடி தவில் வாசித்து சாதனை படைத்தவர். இதன் காரணமாக தமிழகஅரசு மாரிமுத்துவிற்கு கலைச்சுடர்மணி என்ற விருதை கொடுத்து கெளரவித்தது.
இந்நிலையில், இன்று பழனி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாரிமுத்து, தனக்கு வழங்கப்பட்ட விருது மற்றும் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாரிமுத்து, தவில் கலைஞரான தனக்கு ஏற்பட்ட விபத்தில் கால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது வறுமையில் வாடுவதாகவும், வறுமை காரணமாக தமிழக அரசின் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி ஓய்வூதியம் பெற தகுதியில்லை என மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். இப்படி பலமுறை விண்ணப்பித்தும் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாகவும், மேலும் தனக்கு அரசு வழங்கிய விருது ஒரு வேளை சாப்பாட்டு பிரச்சினையைக்கூட உதவவில்லை. எனவே தனக்கு தமிழக அரசு வழங்கிய விருதை அரசிடமே மீண்டும் ஒப்படைக்க போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தவில் இசைக் கலைஞர் ஒருவர் அரசு வழங்கிய விருதை அரசிடமே திரும்ப ஒப்படைக்க வந்த சம்பவம் பரபரப்பையும் ,மனதை கலங்கும் நிலை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments