இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான அரசு பொது தேர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது .அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை 2019 அறிக்கை குறித்து வரைவை கருத்து கேட்பதற்காக கடந்த ஜூன் மாதம் வெளியிட்டு ஆகஸ்ட் மாதம் வரை கருத்துக்கள் கேட்டது ,அதில் பல்வேறு சரத்துகள் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது .இறுதியில் இக்கல்வி கொள்கை ஏற்புடையதல்ல என்ற வகையில் கடுமையான எதிர்ப்ப்பை மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் முன்வைத்து பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.அதில் மிக முக்கியமானதாக 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை எட்டு பருவத் தேர்வை (செமஸ்டர்) நடத்துவதாக கூறியதை கடுமையாக எதிர்த்தனர் .
தமிழக அரசும் இதே காலகட்டத்தில் 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு முதலே நடைபெறும் எனக்கூறியது.தமிழக மக்களும் மாணவர்களும் இவ்வறிவிப்பை எதிர்த்து போராடியதை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் நடைமுறைப்படுத்துவோம் இந்தாண்டு பொதுத்தேர்வு இல்லை என அறிவித்தது .ஆனால் 22.10.2019 தேதியிட்ட அரசாணை வரும் 2019-20 கல்வியாண்டு முதலே 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அறிவித்துள்ளது .
மாணவர்களின் தற்கொலை அதிகரிக்க தேர்வுமுறை மிக முக்கிய காரணம் என நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் இது துவக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாக அமையும் அவர்களின் வாழ்வியல் சார்ந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்யும் .எனவே இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் ,மாவட்ட செயலாளர் ஜாய்சன் ,மாவட்ட துணைத் தலைவர் கார்த்தி ,ஒன்றிய செயலாளர் விஜய் ,கிளை செயலாளர்கள் கிருஷ்ணன்,அகிலேஷ்,விஷ்ணு சரோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments