நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை எழும்பூர் காவல் கட்டுப்பாட்டறைக்கு செல்போன் எண்ணிலிருந்து பேசிய மர்ம நபர், குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அதிமுக அரசு துரோகம் செய்துவிட்டது என்றும், தலைமைச் செயலகம், முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
போலீஸார் நடத்திய விசாரணையில் போன் செய்த நபர் கோவையிலிருந்து பேசியது தெரியவந்துள்ளதாகவும், அந்த நபரை பிடிக்க கோவையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மர்ம நபர் எச்சரித்ததால், அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
சட்டமன்ற நுழைவு வாயில், கொடி மரத்திற்கு எதிரே அமைந்துள்ள புல்வெளி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட தலைமைச் செயலகத்தின் அனைத்து பகுதிகளும் தீவிரமாக சோதனையிடப்பட்டன.
வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.



0 Comments