நகராட்சி, மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேதி ஏதும் முடிவு செய்யப்பட்டுள்ளதா என தமிழக தேர்தல் ஆணையத்திடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள்ளாக வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் கூறியிருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது முதற்கட்டமாக கிராம பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது என்றும் அது முடிந்த பின் அடுத்த கட்டமாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை பதில்மனுவாக தாக்கல் செய்யவும் வழக்கு குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 27 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54 ஆயிரத்து 747 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 ஆயிரத்து 939 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரத்து 992 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.


0 Comments