தூத்துக்குடி அருகே பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாய், சகோதரியிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தனது தயாாரிடம் கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்தில் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார், மற்றும் அப்பெண்ணின் சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் ராஜ் (48) என்பவர்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளனர். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜ், வீட்டிற்கு மாணவி டிவி பார்க்க சென்றுள்ளார். அப்போது மாணவியுடன் நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். மேலும் 6 மாதத்தில் குறை பிரசவத்தில் மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை புதைத்தாக மாணவியின் தாயார், சகோதரி மற்றும் மாணவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் நாளை காலை தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். மாணவியை கர்ப்பமாக்கிய ராஜ்-க்கு, திருமணமாகி மனைவியும், 22 வயதில் மகனும், 21 வயதில் மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments