2020 ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அடுத்த ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டம் ஜனவரி 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தின சட்டப்பேரவை கூட்டம் ,ஆளுநர் உரையுடன் துவங்கும் என அறிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்கும் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் உரையாற்றிய பின்னர், அன்றைய சட்டசபை நிகழ்வு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். குடியுரிமை திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்துள்ளது தொடர்பான பிரச்னை எதிர்கட்சிகளால் எழுப்பப்பட்டு, பேரவை கூட்டத்தொடரில் விவாதம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



0 Comments