உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள சுப்புலட்சுமி என்பவர் இரு பொது நல மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் அ.தி.மு.க வினர் தாங்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தால் தான் இலவச பொருட்கள் பெற டோக்கன் வழங்கப்படும் என்று வாக்குச் சேகரிப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதனால் பணத்திற்கும் இலவச பொருட்களுக்கும் ஆசைப்பட்டு, அ.தி.மு.க.வினர் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் , ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர் , ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனி வண்ணங்களில் வாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை ஒரே பெட்டியில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இதனால் வாக்களிக்கும் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் குழப்பம் ஏற்படுவதோடு வாக்குச் சீட்டுகளை பிரிப்பதில் நேர விரயமும் ஏற்படும் என்று கூறியுள்ளார். எனவே வாக்குச்சீட்டிற்கு ஏற்ப வாக்குப்பெட்டிகளை அமைக்க உத்தரவிடவும் அவர் கோரியிருந்தார்.
அந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்தலின் போது தனித் தனி வாக்குப் பெட்டிகளை வைக்கக் கோருவது தொடர்பாக அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் போது தேர்தல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணைய



0 Comments