தன்னை கல்கி பகவான் என அழைத்து கொள்ளும் சாமியார் விஜயகுமாருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 907 ஏக்கர் நிலத்தை, பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 800 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பும், கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டன.
4,000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் ரொக்கம், 90 கிலோ தங்கம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில், கல்கி குடும்பத்தினரால் 100 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவரது மனைவி ப்ரீத்தா ஆகிய இருவரும் பினாமியின் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதை கண்டுப்பிடித்த, வருமான வரித்துறையினர் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்ட நடவடிக்கையாக கல்கி விஜயகுமார் குடும்பத்தினரின் 907 ஏக்கர் நிலத்தை முடக்கியுள்ளனர்.
பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, இந்த சொத்துகள் அனைத்தும் ஆசிரமத்தின் நம்பத்தகுந்த பக்தர்கள், அவர்கள் நடத்தி வரும் ஆன்மீக பள்ளியின் ஊழியர்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சொத்துக்கள் அனைத்தும் விஜயகுமாரின் மகன் என்.கே.வி கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ப்ரீத்தா ஆகியோர் மூலம் வாங்கப்பட்டு பினாமிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கோவை, உதகை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சத்தியவேடு, கர்நாடகத்தில் பெல்காம் ஆகிய இடங்களில் உள்ள முடக்கப்பட்ட இந்த சொத்துகள் குறித்த விவரங்கள் நில பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.



0 Comments