மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, பூரன் 89 ரன்களும், பொல்லார்ட் 74 ரன்களும் சேர்த்தனர்.
316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர்.
ரோஹித் சர்மா 63 ரன்களும், ராகுல் 77 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட்கோலி 85 ரன்களைக் குவித்தார்.
8 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.



0 Comments