தூத்துக்குடி, ஆகஸ்ட்.3-
மத்திய பாஜக அரசு கல்வித்துறையை சீரழிக்கும் வகையில் நாட்டின் ஜிடிபியில் ஏற்கனவே கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்து வந்த நிதியை மேலும் குறைத்தது. மேலும் கல்வி நிலையங்களில் வகுப்புவாதத்தை புகுத்தவும் முயற்சித்து வருகிறது. தற்போது தேசிய கல்விக்கொள்கை 2019 என்ற பெயரில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை சாதாரண மக்களுக்கு கிடைக்காமல் செய்யவும், கல்வித்துறையை முழுவதுமாக தனியாருக்கு தாரை வார்க்கவும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் கல்வி மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக மத்திய மோடி அரசு பாராளுமன்றத்தில் என்.எம்.சி. மசோதா, நெக்ஸ்ட் தேர்வு முறையை தாக்கல் செய்துள்ளது.
மருத்துவ கவுன்சிலில் தற்போது வரை மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் தான் இருந்து வந்தனர். மத்திய அரசின் புதிய மசோதாவின்படி மருத்துவம் சாராதவர்கள் இந்த கவுன்சிலில் வருவதால் மருத்துவ கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எம்.பி.பி.எஸ் படித்து வரும் மாணவர்கள் அடுத்த கட்ட மேல் படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் நெக்ஸ்ட் தேர்வு முறையை புதிதாக மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இது ஏற்கனவே மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மருத்துவ கல்வியை அழிக்கும். எனவே மத்திய அரசு தாக்கல் செய்து உள்ள என்.எம்.சி. மசோதா, புதிதாக கொண்டு வந்து உள்ள நெக்ஸ்ட் தேர்வு முறைகளை வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மருத்துவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் ராஜசேகர், ராஜா விக்னேஷ்,சார்லஸ்,பிரபாகர்,செந்தில்,தினேஷ் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்க மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments