மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்டதால், மீதமுள்ள ஆட்டம் இன்று நடத்தப்படுகிறது
46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 3.5 ஓவர்கள் இன்று வீசப்பட்டு முடிக்கப்படும். அதன்பின் இந்திய அணி பேட்டிங் தொடரும். டாஸ்வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி பேட்டிங் , இந்திய வீரர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் நிகோலஸ், கப்தில் இருவரும் திணறினார்கள். பும்ரா, புவனேஷ் இருவரின் முதல் ஓவரும் மெய்டன்களாக அமைய முதல் ரன்னை 3-வது ஓவரில்தான் நியூஸிலாந்து எடுத்தது.
இ்ந்த தொடர் முழுவதும் சொதப்பிவந்த கப்தில் இந்த ஆட்டத்திலும் பும்ராவின் பாம்புபோன்று வளைந்து செல்லும் பவுன்ஸருக்கு இரையாகி, கோலியிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்னில் வெளிேயறினார். அடுத்துவந்த வில்லியம்ஸ், நிகோலஸுடன் சேர்ந்தார். இருவரும் ஆமைவேகத்தில் விளையாடியதால், ஸ்கோர் உயரவில்லை. 10 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். உலகக்கோப்பை பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட குறைவான ஸ்கோர் இதுதான்.
நிகோலஸ் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த ராஸ் ெடய்லர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் விளையாடினார்கள்.பும்ரா, புவனேஷ்வர் ஓவரில் அடித்துவிளையாடாமல் பாண்டியா, சாஹல் ஓவரை ஸ்கோர் செய்ய பயன்படுத்திக்கொண்டனர். 15-வது ஓவரில் பவுண்டரி அடித்த நியூஸிலாந்து அணி ஏறக்குறைய 83 பந்துகளுக்கு பின் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தது
நிதானமாக ஆடிய வி்ல்லியம்ஸன் 79 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிதுநேரத்தில் 67 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய நீஷம் 12 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடும் கிராண்ட்ஹோம் வந்தவேகத்தில் 2 பவுண்டரிகளை அடித்து, 16 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் வெளியேறினார். ஒருபுறம் பொறுமையாக ஆடிய டெய்லர் 73 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
டெய்லர் 63ரன்னிலும், லாதம் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தயத் தரப்பில் பும்ரா, புவனேஷ்வர், ஜடேஜா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்றைய ஆட்டத்திலும் மழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வானம் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருக்கும், காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கினாலும் காலை நேரத்தில் மழை பெய்வதற்கு 35 முதல் 47 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாகவும் படிப்படியாக அதிகரித்து 51 சதவீதம் வரை உயரும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது. அதன்பின் நண்பகலில் மழை குறையத்தொடங்கிவடும் எனத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் மீண்டும் மாலை 4 மணி முதல் மழை பெய்ய 40 முதல் 50 சதவீதம் வாய்ப்பு இருக்கும், லேசான சாரல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 14 டிகிரியாகவும் அதிகபட்சம் 21 டிகிரியாகவும் இருக்கும். இன்றைய சூழலில் 20 ஓவர்கள் போட்டியாகவே நடத்தப்பட அதிகபட்சவாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் மழை குறுக்கிட்டாலும் கவலையில்லை இந்திய அணிதான் இறுதிப்போட்டிக்குச்செல்லும்.



0 Comments