ஆடிக்காற்றில் அம்மி பறப்பதைப் போல், அதிமுக ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதனால் தான் அம்மிக்கு பதில் மிக்சி வழங்கப்படுவதாகவும், எப்போதும் தமிழகத்தில் மம்மி ஆட்சிதான் என்றும் எதுகை, மோனையில் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.
சுகாதாரத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ., பூங்கோதை, தனது பேச்சின் இறுதியில், ஆடிக்காற்றில் அம்மி பறக்கும் என்பது பழமொழி அது போல ஆடிக்காற்றில் இந்த ஆட்சியும் பறக்கும் என கூறி முடித்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆடிக் காற்றும் அடிக்காது, அம்மியும் பறக்காது, அம்மாவின் ஆட்சி எப்போதும் அகலாது என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த அரசு அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்ஸி கொடுத்துவிட்டது என்றும் பழைய பழமொழி இப்போது பொருந்தாது என்றார். தமிழகத்தில் எப்போதும் அம்மாவின் ஆட்சி தான் எனப் பொருள்படும் வகையில் மம்மி ஆட்சி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை அடுத்து அவையில் சிரிப்பொலி எழுந்தது.



0 Comments