மத்திய அரசு தற்போது நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள வரியை நீக்கி மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும் என மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரி மற்றும் சாலை உட்கட்டமைப்பு கூடுதல் வரி என ரூ.2.50 விலையை உயர்த்தி உள்ளது. இதிலிருந்து, சாலைகளை பயன்படுத்தாமல் கடல் வழி பயணிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன் கூறுகையில்,
பார்லிமென்டில் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த வெள்ளிகிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரியும், சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் வரியும் தலா ஒரு ரூபாய் உயர்த்தப்படுகிறது. என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதையடுத்து சாலையை பயன்படுத்தும், அத்தனை வாகனங்களுக்கும் சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரியும், சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் வரியை பயன்படுத்திக் கொள்ளலாம். சாலைப் பராமரிப்புக்கு தொடர்பில்லாத, கடலில் நீர்வழியைப் பயன்படுத்தும், விசைப்படகுகளுக்கு எரிபொருளுக்கான வரிவிதிப்பு பொருத்தமற்றது.
விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவார்கள். அதிலும் மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் காற்று அதிகம் வீசுவதால் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்வதில்லை. மீனவர்கள் கடலையே பயன்படுத்தி, கடலிலேயே தொழில் செய்து வருகிறோம்.
கஜா புயலால் படகுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து, அதிலிருந்து மீளாத நிலையில், அந்த வரி மீனவர்களுக்கு தேவையில்லாத ஒன்று. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்காமல், விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.



0 Comments