நடப்பாண்டில் 10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 1. அம்மா 2015-16ஆம் ஆண்டில், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தினார்கள். அம்மாவின் அரசால் இதற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 1,200 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம், 5,000 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
2. "கஜா” புயலினால் கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்களுக்கு அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டத்திற்குட்பட்ட சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களில் மறுசீரமைப்புப் பணிகள் 200 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
3. பழுதடைந்த கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகளை வலுப்படுத்தவும், தார் இடப்படாத சாலைகளை தார்ச் சாலைகளாக மேம்படுத்தவும், நடப்பு ஆண்டில் 255 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக சாலைகள் மேம்பாடு மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. ஊரகப் பகுதிகளில், குடியிருப்புகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் தடுத்திடவும், நீர் வடிக்கப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டவும், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், தனிநபர் உறிஞ்சுக் குழிகள் அமைக்கவும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவு நீர் வடிகால்களைச் சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட 2 லட்சத்து 500 சமுதாய உறிஞ்சுக் குழிகள், 183 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்.
5. கிராமப் புறங்களில் தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைக் கொண்டு நடப்பாண்டில் 10,000 தடுப்பணைகள் 312 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



0 Comments