தூத்துக்குடி மாவட்டத்தில் கழிவு பொருட்களில் இருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் போட்டி நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினவிழா விரைவில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் , செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து விழா பேருரையாற்ற உள்ளார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் உள்ள கழிவு பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி அளவில் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி அளவில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல் மூன்று பரிசுகளும், கல்லூரி அளவில் முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. அளவில் முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் என மூன்று பிரிவுகளாக 9 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் வீட்டிலேயே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் கலைப்பொருட்களாக உருவாக்கி அதனை ஜூன் 12ம் தேதியன்று அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிற்கு எடுத்து வரவேண்டும். அங்கு தேர்வு குழுவினர் மூலம் சிறந்த மறுசுழற்சி கலைப்பொருள் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர்கள் அவர்கள் பங்கேற்கும் உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



0 Comments