மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மருத்துவர்களின் பிரதிநிதிகளுடன், முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளியின் உறவினர்களால் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் 8ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணியிடப் பாதுகாப்பு, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மருத்துவர்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகங்கள் முன்னிலையில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்து இருந்தனர். இதற்கிடையே, இந்திய மருத்துவர்கள் சங்கமானது நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்குவங்கத்தில் உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தலா இரு பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அம்மாநில அரசு அழைத்தது. ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டார்.
இதை அடுத்து, 24 மருத்துவப் பிரதிநிதிகளும், சுகாதாரத்துறை பேருந்தின் மூலம் ஹவுராவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



0 Comments