உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவீந்திர குமார். இவர் தற்போது குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23-ம் தேதி "தூய்மை கங்கா, தூய்மை பாரதம்" திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கங்கை நீருடன் எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது முதன்முறை அல்ல, இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். தற்போது சீனா வழியாக ஏறியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற சாதனையையும் ரவீந்திர குமார் படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை இரு வழிகளிலும் கடந்த வெகு சில இந்தியர்களில் இவரும் ஒருவராவார். எவரெஸ்ட் பயணம் குறித்து அவர் கூறுகையில், " தற்போதைய காலகட்டத்தில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம், 2020க்குள் வெகுவாக குறையும் என்றும் இதனால் 100 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் எனவும் நிதி ஆயோக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் தண்ணீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினேன்.
இந்தியாவில் 50 சதவீத மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் பரவும் 21 சதவீத நோய்கள் தண்ணீரால் தான் ஏற்படுகின்றன. சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் 2 லட்சம் மக்கள் இறக்கின்றனர். நாட்டில் 80 சதவீத நீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. தண்ணீரின் அவசியத்தை மக்கள் கட்டாயம் உணர வேண்டும்" என கூறினார்.


0 Comments