தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வு 21.06.2019 அன்று ராமநாதபுரத்தில் வைத்து நடைபெறவுள்ளது. அவ்வமர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட எவரும் நேரில் தெரிவிக்கலாம்
மத்திய அரசின் சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து விவசாயிகளுக்கு இத்திட்டம் மூலம் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
தேரிக்குடியிருப்பு காமராஜர் அரசு பள்ளி, காளம்பட்டி அரசு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தோழப்பன் பண்ணை அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சனையை தீர்க்க, வேப்பலோடை, வேம்பாரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது. டவுண் பஸ்கள் அனைத்து எஸ்ஏவி மைதானத்தில் இருந்து இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என்றார். பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மக்கள் தொடர்பு அலுவலம் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


0 Comments