கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கவும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், உணவகங்களைத் திறந்து பார்சல்களை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம்,ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொது மக்களுக்கான விமான, இரயில், பொது பேருந்து போக்குவரத்து.

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா.

7. மெட்ரோ இரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

8. மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்குவரத்து.

9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.