முன்பகையால் மூண்ட தீ..!15 வயது சிறுமி எரித்துக் கொலை..!

Breaking News

header ads

முன்பகையால் மூண்ட தீ..!15 வயது சிறுமி எரித்துக் கொலை..!

விழுப்புரம் அருகே இரு தரப்புக்கு இடையிலான முன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமதுரையைச் சேர்ந்த ஜெயபால் எனபவரது தம்பி குமார் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாகவே விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜெயபால் வீட்டு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டதாகவும் அதலிருந்த மோட்டாரை அகற்றி முருகன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை ஜெயபால் கண்டிக்க, மீண்டும் தகராறு எழுந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக முருகனின் உறவினரான பிரவீன்குமார் என்பவர் ஜெயபாலின் மகன் ஜெயச்சந்திரனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபால் திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமைடந்த முருகனும் அவனது உறவினரான கலியபெருமாள் என்பவனும் சேர்ந்து 10ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. 80 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முருகனையும் கலியபெருமாளையும் போலீசார் கைது செய்துள்ளனர். மரணப்படுக்கையில் சிறுமி கொடுத்த வாக்குமூலம் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இரு தரப்புக்கும் நிலம் சம்மந்தமான தகராறு கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்ததாகவும் கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருவதாகவும் கூறினார்.

இதனிடையே, சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் முருகனையும் கலியபெருமாளையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பதாகவும் அவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments